சென்னை: சமீபத்தில், சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ், சீனாவின் தற்போதைய உலக சாம்பியனான டிங் லின்னை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சாதனையை 18 வயதான குகேஷ் படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று இன்று சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பினார் குகேஷ்.
சென்னை வந்த அவருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அலுவலர்கள் அதுல்ய மிஸ்ரா, மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து குகேஷை வீட்டிற்கு அழைத்துச் செல்ல தமிழக அரசு சார்பில் சிறப்பு கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து குகேஷுக்கு தமிழக அரசின் சார்பில் பாராட்டு விழா நாளை மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பாராட்டு விழாவில் பங்கேற்கின்றனர். 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் பலர் பங்கேற்கின்றனர். உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷுக்கு ரூ.5 கோடிக்கான காசோலை வழங்கப்படும். இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது.