தருமபுரி: தருமபுரியில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை கிளை திறப்பு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்குப் பின் கிரிக்கெட் வீரர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு கிராமப்புறங்களில் இருந்து அதிகளவில் வீராங்கனைகள் வருகின்றனர். நவீன கிரிக்கெட்டில் பெண்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
மகளிர் அணி ஆட்டத்தின் தரம் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. ஐபிஎல் தொடரில் 7 ஆண்டுகள் ஹைதராபாத் அணியில் இருந்தேன். இப்போது டெல்லி அணிக்காக விளையாட உள்ளேன். இதில், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்வேன்.
அதேபோல், மிட்செல் ஸ்டார்க் இருக்கிறார். அவர் ஒரு இடது கை பந்துவீச்சாளர், இடது கை பந்துவீச்சாளரான எனக்கு அவருடன் தொடக்க ஓவரை வீச வாய்ப்பு உள்ளது. நானும் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். இன்றைய இளைஞர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறாரோ, அதில் ஈடுபட வேண்டும், அதற்காக போராட வேண்டும்.
நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். எனக்கு கிடைத்தவுடன் ஐபிஎல் விளையாட வேண்டும் என்று விரும்புகிறார்கள். நான் எந்த சிரமமும் இல்லாமல் எல்லாவற்றையும் பெற வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். சிரமம் இல்லாமல் கிடைத்தால் அதன் முக்கியத்துவம் தெரியாது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் டிஎன்பிஎல் என்ற தளத்தை அமைத்துள்ளதால், ஐபிஎல் போட்டிகளில் தமிழக வீரர்கள் அதிகமாக விளையாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இனி வரும் காலங்களில் தமிழகத்தை சேர்ந்த பல வீரர்கள் இப்படி விளையாட வருவார்கள். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. டெல்லி அணிக்காக விளையாட ஆவலாக உள்ளேன். ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு விளையாட தயாராகி வருகிறேன், என்றார். நிகழ்ச்சியின் போது, ஏராளமான ரசிகர்கள் நடராஜனை அணுகி செல்ஃபி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் வந்தனர்.