மும்பை: ஆசிய கோப்பை செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும். இந்தப் போட்டிக்கான இந்திய அணி 19-ம் தேதி தேர்வு செய்யப்படும். இங்கிலாந்துக்கு எதிரான சமீபத்தில் முடிவடைந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
பணிச்சுமை காரணமாக அவருக்கு 2 போட்டிகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவரை எச்சரிக்கையுடன் விளையாட்டில் வைத்திருக்கிறது. ஆசிய கோப்பையில் விளையாடத் தயாராக இருப்பதாக ஜஸ்பிரித் பும்ரா தேர்வுக் குழுவிடம் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர் சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ நிர்வாகத்திடம் பேசியதாகத் தெரிகிறது.

இந்திய அணியை தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான குழு 19-ம் தேதி தேர்வு செய்யும். இந்தக் கூட்டத்தில் 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்படும். பும்ரா கடந்த வாரம் தேர்வுக் குழுவிடம், தான் முழுமையாக உடற்தகுதியுடன் இருப்பதாகவும், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். பிசிசிஐ அதிகாரிகள் கூறுகையில், “பும்ரா ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளார்.
தேர்வுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பிசிசிஐ அதிகாரிகளிடம் அவர் போட்டியில் விளையாடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஜஸ்பிரித் பும்ராவின் பெயரும் 19-ம் தேதி தேர்வுக் குழு கூடும் போது பரிசீலிக்கப்படும் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.” பும்ரா இங்கிலாந்தில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் விளையாடி சிறப்பாக பந்து வீசினார்.
ஒரு இன்னிங்ஸில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். பும்ரா கடைசியாக 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடினார். பிரிட்ஜ்டவுனில் நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.