சென்னை: கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி தனது இந்திய வருகையை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்குவதாக அவர் கூறியுள்ளார். “இந்தியா ஒரு சிறப்பு நாடு. 14 ஆண்டுகளுக்கு முன்பு நான் அங்கு வந்தபோது எனக்குக் கிடைத்த அனுபவத்தின் இனிமையான நினைவுகள் எனக்கு உள்ளன. இந்திய ரசிகர்கள் அற்புதமானவர்கள். இந்தியா கால்பந்து மீது மிகுந்த ஆர்வம் கொண்ட நாடு. இந்த முறை எனது விளையாட்டை விரும்பும் அடுத்த தலைமுறை ரசிகர்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இந்தப் பயணம் எனக்கு ஒரு மரியாதை,” என்று மெஸ்ஸியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (நவம்பர்), மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி கேரள மாநிலத்தில் நட்புரீதியான போட்டியில் விளையாடும்.

இது அணியின் நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இந்தப் பயணத்தை மெஸ்ஸி உறுதிப்படுத்தியது இதுவே முதல் முறை. இந்தப் போட்டியைத் தவிர, டிசம்பர் மாதம் கொல்கத்தா, மும்பை, அகமதாபாத் மற்றும் டெல்லி உள்ளிட்ட 4 இந்திய நகரங்களில் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகளிலும் மெஸ்ஸி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் கொல்கத்தாவில் தனது 70 அடி சிலையை திறந்து வைப்பார். முக்கிய பிரபலங்களையும் அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.