ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணி, தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்ததால், அடுத்த போட்டி அந்த அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. பிப்ரவரி 23 ஆம் தேதி துபாய் மைதானத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும், இந்தியாவும் மோதுகின்றன.
ஐசிசி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதும் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணி, இந்த முறை தனது ஆதிக்கத்தைத் தொடர முனைகிறது. அதேபோல், முதல் போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, மீண்டும் எழுச்சி பெற இந்திய அணியுடன் விளையாடும், எனவே இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியை தோற்கடித்து மீண்டும் வெற்றி பெறுவோம் என்று பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “எங்கள் அணியில் உள்ள வீரர்கள் மீது எந்த அழுத்தமும் இல்லை என்று நினைக்கிறேன். அனைவரும் நிம்மதியாக இருக்கிறார்கள். மற்ற நாடுகளுக்கு எதிராக விளையாடுவது போலவே இந்திய அணிக்கு எதிரான போட்டியையும் எதிர்கொள்ளப் போகிறோம். தற்போதைய பாகிஸ்தான் அணியில் உள்ள அனைவரும் நேர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்பதால், இந்தப் போட்டியின் முடிவு நிச்சயமாக எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.”
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மூன்று பிரிவுகளிலும் எங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்துவதே எங்கள் ஒரே திட்டம். துபாய் மைதானத்தில் ஏற்கனவே இரண்டு முறை இந்திய அணியை நாங்கள் தோற்கடித்துள்ளதால், இந்த முறையும் இந்திய அணியை எளிதாக தோற்கடிப்போம் என்று ஹாரிஸ் ரவுப் கூறினார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி 6 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி ஐந்துக்கு பூஜ்ஜியம் (5-0) என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தியுள்ளதால், நாளை நடைபெறும் இந்தப் போட்டியிலும் இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என்று அனைவரும் கருதுகின்றனர்.