லாகூர்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று லாகூரில் நடந்த குரூப் ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 273 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக செதிகுல்லா அடல் 95 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக 85 ஓட்டங்களையும், அஸ்மத்துல்லா ஓமர் ஜாய் 63 பந்துகளில் 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உட்பட 67 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஆஸ்திரேலிய அணி கேப்டன் பில் பென்டுவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலியா 12.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மேத்யூ ஷார்ட் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 40 பந்துகளில் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 19 ஓட்டங்களையும் பெற்றனர். மழை நின்றதால் ஆடுகளத்தில் சில இடங்களில் தண்ணீர் தேங்கியது.
இது அகற்றப்பட்டு வந்தது. இதனிடையே மைதானத்திற்கு வருகை தந்த நடுவர்கள் மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆப்கானிஸ்தான் (நிகர ரன் ரேட் -0.990) 3 புள்ளிகளுடன் உள்ளது. குரூப் ‘பி’ இன் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் கராச்சியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இங்கிலாந்து ஏற்கனவே இழந்துவிட்டது. 2.140 என்ற நிகர ஓட்ட விகிதத்துடன் தென்னாப்பிரிக்கா ஏற்கனவே 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடையாவிட்டால் அரையிறுதிக்கு முன்னேறும்.