துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும். இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று மதியம் மும்பையில் இருந்து துபாய் புறப்பட்டு சென்றது. இரவு துபாய் சென்றடைந்தனர். கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், அக்சர் படேல், முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, ஷுப்மன் கில், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் உதவி பயிற்சியாளர்கள் பயணம் செய்தனர்.
மீதமுள்ள சில வீரர்கள் விரைவில் இந்திய அணியில் இணைவார்கள். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக வரும் 20ம் தேதி விளையாடுகிறது. இதையடுத்து இந்திய அணி 23-ம் தேதி பாகிஸ்தானுக்கும், மார்ச் 2-ம் தேதி நியூசிலாந்திற்கும் எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என கைப்பற்றி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நுழைந்துள்ளது.