2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாடிய வந்த வேளையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதைத் தொடர்ந்து, இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே நேற்று லாகூர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 362 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்ச ரன்களை ரச்சின் ரவீந்திர 108 ரன்கள் மற்றும் கேன் வில்லியம்சன் 102 ரன்களாக குவித்தனர்.
பின்னர் 363 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை ஓரளவு சமாளித்து விளையாடி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக, நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
இந்த போட்டியின் போது, 94 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 102 ரன்கள் குவித்த கேன் வில்லியம்சன், முதல் நியூசிலாந்து வீரராக மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில், சதத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான போட்டிகளையும் சேர்த்து 19,000 ரன்களை குவித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார்.
இதற்குள்ளாக, ராஸ் டைலர் 18,199 ரன்கள் குவித்த நிலையில், வில்லியம்சன் 19,075 ரன்கள் குவித்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியானது மார்ச் 9-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது.