பிரிட்ஜ்டவுன்: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணி, நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளின் பார்படாஸில் இருந்து அவர்கள் வரவேண்டிய விமானம் அங்கு சென்றடையவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.
ஏர் இந்தியாவின் சிறப்பு விமானமான ‘AIC24WC’ ஏர் இந்தியா சாம்பியன்ஸ் 24 வேர்ல்ட் கப் என்பதன் சுருக்கம்தான் இது. அந்த விமானத்தில் இந்திய வீரர்கள், அணியின் உறுப்பினர்கள், வீரர்களின் குடும்பத்தினர், பிசிசிஐ பிரதிநிதிகள் மற்றும் புயல் காரணமாக அங்கு சிக்கிய இந்திய ஊடக நிறுவன ஊழியர்கள் வர உள்ளனர்.
இந்த சிறப்பு விமானம் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் இருந்து புறப்பட்டு பார்படாஸ் நகருக்கு அதிகாலை 2 மணி (உள்ளூர் நேரம்) அளவில் வரும். அங்கிருந்து வீரர்களுடன் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும். சுமார் 16 நேர வான் வழி பயணத்துக்கு பிறகு தலைநகர் டெல்லியை ஜூலை 4-ம் தேதி காலை 6 மணி அளவில் அடையும் என தெரிகிறது.
இதில் மாற்றங்கள் இருந்தால் இந்திய அணி தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்படும். புயல் பாதிப்புக்கு பிறகு பார்படாஸில் உள்ள சர்வதேச விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. டெல்லி வரும் இந்திய வீரர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் அது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.