துபாய் நகரில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை டி20 தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இங்கிலாந்து தொடர் முடிவடைந்து 35 நாட்கள் கழித்து தான் இந்த போட்டி நடைபெறுகிறது. ஆரம்பத்தில் இந்தியாவில் நடக்க வேண்டிய இந்த தொடர், இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் ஏற்பட்ட பதற்றத்தால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருப்பதால் தனது செல்வாக்கை பயன்படுத்தி பாகிஸ்தானின் அனைத்து போட்டிகளையும் துபாயில் நடத்த அட்டவணையை அமைத்துள்ளார். இதே விஷயம் கடந்த பிப்ரவரி மாத சாம்பியன்ஸ் கோப்பையிலும் இந்திய அணியைச் சூழ்ந்த விவகாரமாக இருந்தது. அப்போது இந்தியா துபாயில் மட்டுமே விளையாடியது என்பதால் எதிரணிகள் கடும் விமர்சனம் செய்திருந்தனர்.
அப்போது இந்தியாவை குறை சொன்ன பாகிஸ்தான், தற்போது அதே செயலையே செய்துள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். ஒரே மைதானத்தில் தொடர்ந்து விளையாடும் அணிக்கு சாதகமான சூழல் கிடைக்கிறது என்பதால் இது சரியான தீர்மானமல்ல என்று கூறுகின்றனர்.
இந்தியாவின் முதல் இரண்டு போட்டிகள் துபாயிலும் மூன்றாவது அபுதாபியிலும் நடைபெற உள்ளன. ஆனால் பாகிஸ்தான் போட்டிகள் அனைத்தும் துபாயிலேயே நடப்பது ரசிகர்களின் கோபத்தை கிளப்பியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி, “இந்தியாவை குறை சொன்ன நீங்கள் இப்போது அதையே செய்கிறீர்கள், உங்களுக்கு ஒரு விதி எங்களுக்கு ஒரு விதியா?” என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆசிய கோப்பை தொடர் இன்னும் தொடங்கவில்லை என்றாலும், மைதானம் மற்றும் அட்டவணை விவாதங்கள் ரசிகர்களிடையே சூடுபிடித்துள்ளன. இதனால் போட்டி தொடங்கும் முன்பே இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் சூழல் உருவாகியுள்ளது.