லண்டனில் நடைபெறும் பெண்கள் டென்னிஸின் முக்கிய தொடர் ‘பில்லி ஜீன் கிங்’ கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளுக்கு சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பான ஐ.டி.எப். சார்பில் ‘இதயங்களை கவர்ந்தவர்’ விருது வழங்கப்படுகிறது.
2025ம் ஆண்டுக்கான இந்த விருதை இந்திய வீராங்கனை ஸ்ரீவள்ளி ராஷ்மிகா பெற்றுள்ளார். இதற்குமுன் 2020ம் ஆண்டு சானியா மிர்சா மற்றும் 2022ல் அன்கிதா ரெய்னா இந்த விருதை பெற்றுள்ளனர். இவர்கள் பின்னர் இந்த விருதை வென்ற மூன்றாவது இந்திய வீராங்கனையாக ராஷ்மிகா இடம்பிடித்துள்ளார்.

இந்த ஆண்டு ‘பில்லி ஜீன் கிங்’ கோப்பையில் இந்தியா ஆசிய மற்றும் ஓசியானா பிரிவில் பங்கேற்றது. நியூசிலாந்து, தாய்லாந்து, ஹாங்காங், சீன தைபே மற்றும் தென் கொரியா ஆகிய ஐந்து அணிகளுடனும் நடைபெற்ற ஒற்றையர் போட்டிகளில் ராஷ்மிகா வெற்றிபெற்றார். இவரது அசாதாரண ஆட்டத்தால் இந்திய அணி ‘குரூப் 1’ பிரிவுக்கு முன்னேறியதை குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றிகள் மட்டுமல்லாமல், சர்வதேச அரங்கில் அவர் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு, துணிச்சல் மற்றும் நாட்டுப்பற்று ஆகியவை விருது வழங்கப்படுவதற்கான முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன. ராஷ்மிகாவின் இந்த வெற்றி இந்திய டென்னிஸ் வரலாற்றில் முக்கியமான சாதனையாக கருதப்படுகிறது.