மும்பை: ஐபிஎல் 2025 சீசனில் குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கான போட்டி என்பதால் இரு அணிகளும் கடுமையாக மோதின. மழை காரணமாக ஆட்டம் இருமுறை தடைப்பட்டு, இதன் பின்னர் குஜராத் அணி கடைசியில் மூன்று விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இதன் மூலம் குஜராத் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

இந்த ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்துக் கொண்டது. இதன் காரணமாக, கடைசியில் வெறும் நான்கு பில்டர்கள் மட்டுமே பவுண்டரி லைனில் நிற்க அனுமதி வழங்கப்பட்டது. ஹர்திக் பாண்டியாவின் தவறான நடவடிக்கையால் போட்டி தாமதமாகியது. இதன் காரணமாக, பிசிசிஐ அவருக்கு 25 சதவீத அபராதம் விதித்துள்ளது. இது நடப்பு சீசனில் இரண்டாவது முறையாக நடந்தது.
ஹர்திக் பாண்டியாவுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதமும், மற்ற வீரர்களுக்கு 6 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குஜராத் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவுக்கும் 25 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்த போது, நடுவர்களுடன் குஜராத் அணியின் பயிற்சியாளர் நெஹ்ரா வாக்குவாதத்தில் ஈடுபட்டார், இதனால் அவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ அதிகாரிகள், நெஹ்ரா தன் தவறை ஒப்புக்கொண்டார் என்றும், ஆனால் என்ன தவறு நடந்தது என்பது தொடர்பான விவரம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.