லண்டன்: முன்னாள் பிசிசிஐ செயலாளரும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவருமான ஜெய் ஷா, கிரிக்கெட் உலகின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய அமைப்பான மேரில்போன் கிரிக்கெட் கிளப்பின் சர்வதேச ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 2024-ம் ஆண்டில், மேரில்போன் கிரிக்கெட் கிளப் 120 உறுப்பினர்களைக் கொண்ட வேர்ல்ட் கிரிக்கெட் கனெக்ட்ஸ் ஃபோரம் என்ற அமைப்பை உருவாக்கியது.
அதற்கு முன், அதன் பெயர் உலக கிரிக்கெட் கமிட்டி. புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழுவில் 120 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் கிரிக்கெட்டில் முக்கியமானவர்கள். தற்போது அந்த ஆலோசனைக் குழுவில் ஜெய் ஷா சேர்க்கப்பட்டுள்ளார். பிசிசிஐ முன்னாள் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கும் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக ஜெய் ஷா கருதப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இளைய தலைவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தனது 36-வது வயதில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேரிலெபோன் கிரிக்கெட் கிளப்பின் உலக கிரிக்கெட் கமிட்டிதான் டிஆர்எஸ் மறுஆய்வு முறை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ஆலோசனை வழங்கியது. இவை இரண்டும் தற்போது கிரிக்கெட்டில் செயல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், கிரிக்கெட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியமான அமைப்பு இது. தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக உள்ள ஜெய் ஷாவும் இந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தார். ஜெய் ஷா சமீபத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மாற்றத்தை கொண்டு வர முயன்றார். இரண்டு அடுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்துவது குறித்து, ஒரு குழுவில் முக்கிய டெஸ்ட் அணிகளும் மற்றொரு குழுவில் மற்ற அணிகளும் இடம் பெறுவது குறித்து அவர் கிரிக்கெட் அமைப்புகளுடன் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.