இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆண்டர்சன்-டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி மான்செஸ்டரில் ஜூலை 23 ஆம் தேதி தொடங்கியது. இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த கே.எல். ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் குவித்தனர்.

இந்த போட்டியில், கே.எல். ராகுல் 15 ரன்கள் அடித்த தருணத்தில், இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்கள் பூர்த்தி செய்தார். இதன் மூலம், அவர் இங்கிலாந்தில் இந்த சாதனையை நிகழ்த்திய 5வது இந்திய வீரராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இது பேட்டிங் செய்ய மிகவும் கடினமான தருணங்களை ஏற்படுத்தும் இங்கிலாந்து சூழ்நிலையில் மிகப்பெரிய சாதனை என சொல்லப்படுகிறது.
இதை முன் கடந்தவர்கள் சச்சின் டெண்டுல்கர் (1575 ரன்கள்), ராகுல் டிராவிட் (1376), சுனில் கவாஸ்கர் (1152), விராட் கோலி (1096) ஆகியோர். இப்போது இவர்களுக்கு அடுத்தவையாக 1000 ரன்கள் அடைந்துள்ள கே.எல். ராகுல், வெளிநாட்டு மண்ணில் தனது திறமையை உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இரு சதங்கள் அடித்து அபாரமாக விளையாடிய ராகுல், தற்போது இங்கிலாந்து மண்ணில் தன் பெயரை பொறித்துள்ளார். இந்த வரலாற்று சாதனை அவருடைய தொடரையும், இந்திய அணியின் நம்பிக்கையையும் மேலும் உயர்த்தியிருக்கிறது.