தென்னாப்பிரிக்காவின் முன்னணி பாஸ்ட் பவுலராக விளங்கும் ககிசோ ரபடா, 2025 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக பங்கேற்றார். தொடரின் நடுப்பகுதியில், அவர் திடீரென போட்டியில் இருந்து விலகி சொந்த நாட்டுக்கு திரும்பினார். முதலில், அவரது மட்சி தவிர்க்கும் முடிவுக்கு “தனிப்பட்ட காரணங்கள்” என்பதே காரணமாக கூறப்பட்டது. ஆனால் பின்னர் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததற்காக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தால் ஒரு மாதத்திற்குப் பிறப்பிக்கப்பட்ட இடைநீக்கம் என தகவல் வெளியானது.

இடைநீக்கத்திற்குப் பின் ரபடா மீண்டும் இந்தியா திரும்பி குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடினார். இந்த விவகாரம் குறித்து பேசும்போது, அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டதுடன், தன்னுடைய தவறுக்கு மன்னிப்பும் கேட்டார். இது பொழுதுபோக்குக்காகச் செய்த ஒரு தவறாக இருந்ததாகவும், பயன்படுத்திய போதைப்பொருள் எதென குறிப்பட விரும்பவில்லை என்றும் கூறினார்.
அவரது செயலுக்கு வருத்தம் தெரிவித்த ரபடா, “நான் ஏமாற்றிய அனைவரிடமும் மனமுவந்து மன்னிப்பு கேட்கிறேன். கிரிக்கெட் எனக்கு கிடைத்த ஒரு பெரிய பாக்கியம். அதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இது என் விருப்பங்களைவிட மேலானது,” என உருக்கமாக தெரிவித்தார்.
இந்தக் கடைசி முறையான பரிசோதனையின் விளைவாக, தென்னாப்பிரிக்காவின் போதைப்பொருள் தடுப்பு நிறுவனமான SAIDS தனது அறிக்கையில் ரபடா பயன்படுத்திய பொருள் கோகைன் என்பதைக் கண்டறிந்ததாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அவர் உடலில் ‘பென்சாயிலெகோனைன்’ என்ற கோகைனின் வளர்சிதை மாற்றப் பதார்த்தம் இருந்ததை பரிசோதனையில் உறுதி செய்துள்ளனர்.
இந்த செய்தி வெளியாகிய பிறகும், ரபடா கிரிக்கெட்டில் மீண்டும் தொடர்ந்து விளையாடுவதை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அனுமதித்துள்ளது. இதன் அடிப்படையில், ஜூன் 11 முதல் 15 வரை ஆஸ்திரேலியாவுடன் லார்ட்ஸில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் ரபடா இடம்பிடித்துள்ளார்.
அவர் பயன்படுத்திய போதைப்பொருள் செயல்திறனை அதிகரிக்கவே பயன்படுத்தப்பட்டது என்ற ஆதாரங்கள் இருந்திருந்தால், அவருக்கு நீண்டகால தடை கிடைத்திருக்கும். ஆனால் இது பொழுதுபோக்குக்காக மட்டுமே என்பதால், குறுகிய கால இடைநீக்கம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய ரசிகர்களிடமிருந்து ரபடாவுக்கு எதிரான கிண்டல், சாடல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அவருடைய பங்களிப்பு மட்டும் அல்ல, அவரது தனிப்பட்ட விவகாரமும் மீண்டும் பேசப்படும் தலைப்பாக இருக்கிறது.
இந்த சர்ச்சைக்கு பிறகும் மீண்டும் தன்னைத்தான் நிரூபிக்க களமிறங்கும் ரபடாவிடம் ரசிகர்கள் எதனை எதிர்பார்க்கின்றனர் என்பதைத் தரும் நேரமே தீர்மானிக்கும்.