துபாய்: துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறும் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
‘டி-20’ உலக சாம்பியன் இந்திய அணி அசுர பலத்துடன் களமிறங்குகிறது. துணை கேப்டன் சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஆகியோர் துவக்க வீரர்களாக வருவார்கள். பின்னர் திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே ஆகியோர் களமிறங்குவர். கீப்பராக சாம்சனுக்கு வாய்ப்பு இல்லை. அதற்குப் பதிலாக ஜிதேஷ் சர்மா 7வது இடத்தில் விளையாடுவார். அக்சர் படேல் 8வது இடத்தில் இருப்பார். பந்துவீச்சில் பும்ரா மிரட்டுவார். துபாய் மைதானம் முன்பு சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது.

அதனால் சாம்பியன்ஸ் டிராபியில் ஜடேஜா, அக்சர், குல்தீப், வருண் சக்ரவர்த்தி என நான்கு ஸ்பின்னர்கள் களமிறங்கினர். தற்போதைய புதிய மைதானம் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிற்கும் சாதகமாக உள்ளது. எனவே அக்சருடன் கூடுதலாக ஒரு ஸ்பின்னர் சேர்க்கப்படலாம். அதற்கான வாய்ப்பு வருண் அல்லது குல்தீப்புக்கு கிடைக்கலாம்.
பலம்குறைவான எமிரேட்ஸ் அணியின் கேப்டன் முகமது வசீம், ராகுல் சோப்ரா, சிம்ரன்ஜீத் சிங் போன்ற வீரர்கள் இந்தியாவுடன் விளையாடும் அரிய வாய்ப்பைப் பெற்றுள்ளனர். 2007 டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணி மானேஜராக இருந்த லால்சந்த் ராஜ்புட், தற்போது எமிரேட்ஸ் அணியின் பயிற்சியாளராக இருப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. “இந்தியா பலம் வாய்ந்த அணி. ஆனால் எமிரேட்ஸ் அணியும் ஆசிய கோப்பைக்குத் தயாராக உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிம்ரன்ஜீத் சிங் கூறுகையில், “நானும் சுப்மனும் பஞ்சாபில் ஒன்றாகப் பயிற்சி மேற்கொண்டோம். அப்போது சுப்மனுக்கு 12 வயது. பல மணி நேரம் அவருக்கு பந்து வீசியிருக்கிறேன். இப்போது அவர் என்னை அடையாளம் காண்கிறாரா தெரியவில்லை” என்றார்.