டோக்கியோவில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பெருமைமிகு வீரர் நீரஜ் சோப்ரா மீண்டும் பதக்கம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. உலகின் 198 நாடுகளிலிருந்து 2202 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் இந்தியாவிலிருந்து 19 பேர் களமிறங்கியுள்ளனர்.

இன்று நடைபெறும் ஆண்கள் ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா பங்கேற்கிறார். ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற அவர், 2021ல் டோக்கியோவில் இந்தியாவுக்கு முதல் தடகள தங்கம் பெற்றுத் தந்தார். அதே மைதானத்தில் மீண்டும் களம் காணும் அவர், பைனலுக்கு முன்னேறுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். இவருடன் சச்சின் யாதவ், யாஷ்விர் சிங், ரோகித் யாதவ் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
அதே சமயம், கடந்த மாதம் 90 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்த செக் வீரர் ஜாகுப் வாடில்ச், பிரேசிலின் லுயிஸ் டா சில்வா, கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், கென்யாவின் ஜூலியஸ் எகோ போன்றோர் கடும் போட்டியாளர்களாக இருக்கிறார்கள். இவர்களுடன் மோதிக்கொண்டு முன்னேறுவது சோப்ராவுக்கு சவாலாக இருக்கும்.
இதற்கிடையில், இந்தியாவின் சர்வேஷ் அனில் குஷாரே உயரம் தாண்டுதல் பிரிவில் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்தியராக சாதனை படைத்தார். இறுதியில் 2.28 மீட்டர் உயரம் தாண்டி 6வது இடம் பிடித்தார். இது அவரது சிறந்த ஆட்டமாக கருதப்படுகிறது. இந்திய வீரர்களின் தொடர்ந்த முன்னேற்றம் நாட்டின் தடகள வரலாற்றில் புதிய அத்தியாயங்களை உருவாக்கி வருகிறது.