ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பாகும் புரோ கபடி லீக் சீசன் 12 விறுவிறுப்பாக துவங்கி ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது. முந்தைய சீசன்களுடன் ஒப்பிடும் போது, இந்த முறை போட்டிகள் இன்னும் அதிக பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவில் கபடியின் நிலையை மாற்றியமைத்த இந்த லீக், இளம் வீரர்களுக்கு திறமையை வெளிப்படுத்த முக்கிய தளமாக அமைந்துள்ளது.

இதுவரை 11 சீசன்கள் நிறைவு பெற்ற நிலையில், பன்னிரண்டாவது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 14 ஆட்டங்கள் முடிந்துள்ளன. அதில் 10 ஆட்டங்கள் வெறும் ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் முடிவடைந்துள்ளன. இதன் மூலம் இந்த சீசன் எவ்வளவு நெருக்கமாக நடைபெறுகிறது என்பதைக் காட்டுகிறது. முந்தைய சீசன்களில் 43 சதவீதம் போட்டிகள் மட்டுமே ஐந்து புள்ளிகளில் முடிவடைந்த நிலையில், இப்போது அதிக சுவாரஸ்யம் நிலவுகிறது.
புனேரி பல்தான் அணியின் பயிற்சியாளர் அஜய் தாகூர், “இந்த சீசன் மிகவும் போட்டியானது. வீரர்கள் உடல்நலம், பயிற்சி ஆகியவற்றில் தீவிரமாக கவனம் செலுத்துகின்றனர். புதிய விதிமுறைகள் ஆட்டத்தை மேலும் விறுவிறுப்பாக மாற்றியுள்ளன” என்று தெரிவித்தார். அதேபோல் கேப்டன் அஸ்லம் இனாம்தார், “ஒவ்வொரு ஆட்டமும் நெருக்கடியில் முடிகிறது. ரசிகர்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமான பரபரப்பு உள்ளது” என்று கூறினார்.
ஜியோ ஹாட்ஸ்டார் நிபுணர் ரிஷாங்க் தேவாதிகா, “இளம் வீரர்கள் அனுபவமிக்கவர்களுக்கு சவால் விடுத்து விளையாடுகின்றனர். இதனால் போட்டிகள் இன்னும் திரில்லிங்காகின்றன” என்றார். டிஜிட்டல் தளங்களில் கூட ரசிகர்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. புரோ கபடி லீக் பார்வையாளர்கள் நேரம் 22 சதவீதம் உயர்ந்துள்ளது. ரசிகர்கள் நேரலையாகவும் பிரத்தியேகமாகவும் இந்த ஆட்டங்களை அனுபவிக்கலாம்.