பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க், சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இனி அவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் பிரிமியர் லீக் போட்டிகளில் மட்டுமே பங்கேற்பார்.
35 வயதான ஸ்டார்க், மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் பந்துவீசும் திறமை கொண்டவர். துல்லியமான யார்க்கர் மற்றும் பவுன்சர்களில் வல்லவர். 2012 ஆம் ஆண்டு T20 போட்டியில் அறிமுகமான அவர், 2021ல் ஆஸ்திரேலியா T20 உலகக்கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார். மொத்தம் 65 போட்டிகளில் 79 விக்கெட்டுகள் எடுத்து, ஆஸ்திரேலியாவின் இரண்டாவது அதிக விக்கெட் எடுக்கும் பவுலராக திகழ்ந்தார்.

இந்திய பிரிமியர் லீக்கில் ஸ்டார்க்கிற்கு எப்போதும் உயர்ந்த மதிப்பு இருந்தது. 2024ல் கோல்கட்டா அணி ரூ. 24.75 கோடிக்கு வாங்கியதில், அந்த அணிக்கு கோப்பை வெல்லக் காரணமானார். 2025ல் டெல்லி அணி ரூ. 11.75 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. அடுத்த ஆஷஸ் தொடர் மற்றும் 2027 உலகக்கோப்பையை முன்னிட்டு, உடல்நலனைக் காக்கும் வகையில் அவர் சர்வதேச T20 போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
“டெஸ்ட் போட்டிக்கு எப்போதும் முன்னுரிமை கொடுப்பேன். ஆனாலும் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய ஒவ்வொரு T20 போட்டியும் எனக்கு இனிய நினைவுகள். 2021 உலகக்கோப்பை வெற்றி ஒருபோதும் மறக்க முடியாது. அடுத்தடுத்த தொடர்களுக்கு தயாராக இருக்க ஓய்வு அவசியமானது,” என ஸ்டார்க் தெரிவித்துள்ளார். அவரது ஓய்வு, ஆஸ்திரேலிய அணிக்கு சவாலாக இருந்தாலும், புதிய தலைமுறை பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு உருவாகும் என கூறப்படுகிறது.