மும்பை: ஐசிசி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடினமான சோதனை குறித்து இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார். அவர் தலைமையிலான இந்திய அணி 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டி, 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியுள்ளது.
2023-ல் நடந்த இரண்டு இறுதிப் போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்தது. அதுவும் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில். அந்த ஆண்டு நவம்பர் 19 அன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. “ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி எங்கள் ஒருநாள் உலகக் கோப்பை கனவை நாசமாக்கியது.

எனவே நாங்கள் அவர்களுக்கு சிறந்த பரிசை வழங்க முடிவு செய்தோம். இதுபோன்ற பேச்சுக்கள் டிரஸ்ஸிங் அறையில் நடக்கும். 2024 டி 20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியர்களுக்கு எதிரான போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றால், அவர்கள் இந்தத் தொடரிலிருந்து வெளியேறுவார்கள் என்பதை நாங்கள் மனதில் வைத்திருந்தோம். நான் அந்த போட்டியில் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எப்படியாவது ரன்கள் எடுக்க முடிவு செய்தேன். அவர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட விரும்பினேன்.
அதனால் ஒவ்வொரு ஆஸ்திரேலிய பந்து வீச்சாளரையும் தாக்கி விளையாட முயற்சித்தேன்,” என்று ரோஹித் இப்போது கூறினார். கடந்த ஆண்டு ரோஹித் தலைமையிலான இந்திய அணி டி 20 உலகக் கோப்பை தொடரை வென்றது. அந்த தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில், ரோஹித் 41 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார். அவர் 8 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளை அடித்தார். அந்த போட்டியில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 224.39.
இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. இதேபோல், இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அரையிறுதிப் போட்டியில், இந்தியா ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.