இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா தற்போது சிறப்பாக விளையாடவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் அவர் சிறப்பாக விளையாடாததே இந்தியாவின் தோல்விக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. முதல் போட்டிக்கு முன் செய்தியாளர்கள், “இந்த தொடரில் எப்படி ஆடப் போகிறீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு ரோஹித், “இது கேள்வியா?” என்று கோபத்துடன் பதிலளித்தார்.
தனது ஓய்வு குறித்து கேள்வி எழுப்புவதை மறுத்த அவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் வெவ்வேறு ஃபார்மட் என்பதால் பழைய தோல்விகளை நினைக்க முடியாது என்றார். ஆனால் முதல் போட்டியில் 2 ரன்னில் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார். இந்த நிலையில், விமர்சகர்களின் வாயை அடைக்க ரோஹித் சதமடிக்க வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அவர், “ரோஹித்துக்கு இது கோபத்தை தரக்கூடியது. ஆனால் ஒருநாள் தொடரில் வெற்றி பெறுவதற்காக அவர் தனது கவனத்தை செலுத்த விரும்புகிறார்” என்றார். அஸ்வின் மேலும் கூறுகையில், “விமர்சனங்களை நிறுத்த ஒரு வழி மட்டும் தான். ரோஹித் சர்மா இந்த தொடரில் சதமடித்து அனைவருக்கும் பதிலடி கொடுக்க வேண்டும். நான் இதை மனமார வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.