ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 156 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 31, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 29, தீபக் சஹர் 28* ரன்கள் எடுத்தனர். சென்னைக்கு அதிகபட்சமாக நூர் அகமது 4, கலீல் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியை கட்டுக்குள் வைத்தனர்.

அடுத்ததாக களமிறங்கிய சென்னை அணிக்கு கேப்டன் ருதுராஜ் அதிரடியாக விளையாடி 53 (26) ரன்கள் விளாசி நல்ல துவக்கத்தைக் கொடுத்தார். ஆனால் எதிர்ப்புறம் ராகுல் திரிபாதி, சிவம் துபே, தீபக் ஹூடா, சாம் கரண் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ரச்சின் ரவீந்தரா நங்கூரமாக விளையாடி 65* (45) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார்.
இந்த சிறப்பான ஆட்டத்தால், 19.1 ஓவரில் 158/6 ரன்களை எடுத்து சென்னை போராடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி தொடரை வெற்றிகரமாக தொடங்கியது. மும்பை அணிக்கு அதிகபட்சமாக 24 வயது இளம் வீரர் விக்னேஷ் புதூர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியதால், தோனியே போட்டி முடிவில் அவரை பாராட்டினார்.
போட்டிக்குப் பிறகு, மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார், 15 – 20 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார். மேலும், தோனி பாராட்டிய விக்னேஷை கடந்த 10 மாதங்களாக மும்பை நிர்வாகம் தீவிரமாக பயிற்சி அளித்துள்ளதாக அவர் கூறினார்.
அதுமட்டுமல்ல, இரண்டாவது இன்னிங்ஸில் ருதுராஜ் அதிரடியாக விளையாடி வெற்றியை மும்பை அணியிடமிருந்து பறித்துவிட்டதாக சூர்யகுமார் வருத்தத்துடன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: “கண்டிப்பாக நாங்கள் 15 – 20 ரன்கள் குறைவாக எடுத்தோம். ஆனால் எங்களுடைய வீரர்கள் வெளிப்படுத்திய போராட்டம் திடமானது. இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு 10 மாதங்கள் பயிற்சிக் கொடுத்து சரியான வாய்ப்புகளை வழங்குவதற்காக மும்பை அணி பெயர் பெற்றுள்ளது. விக்னேஷ் அதில் ஒரு ப்ராடக்ட். போட்டி ஆழமாக செல்லும் என்று நினைத்து, அவருடைய ஒரு ஓவரை பாக்கெட்டில் வைத்திருந்தேன்.”
மேலும், “அவருக்கு 18வது ஓவரை கொடுத்திருந்தால் அது மூளையற்ற முடிவாக இருந்திருக்காது. பனி எதுவும் இல்லை. பிட்ச் கொஞ்சம் நின்று வந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ருதுராஜ் பேட்டிங் செய்த விதம் வெற்றியை எங்களிடமிருந்து பறித்து விட்டது. இது ஒரு நீண்ட பயணம்” என்றும் அவர் கூறினார்.
இந்த வெற்றியால், சென்னை அணி தொடக்கத்திலேயே தன் தரத்தை நிரூபித்தது. ருதுராஜ் – ரவீந்திராவின் அதிரடி ஆட்டம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.