டிரினிடாட்: நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் நகரில் இன்று (வியாழக்கிழமை) காலை ஐ.எஸ்.டி.யில் தொடங்கிய இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்தது. அஸ்மதுல்லா 10 ரன்கள் எடுத்தார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். குர்பாஸ், நபி, நூர் அகமது ஆகியோர் ரன் ஏதும் எடுக்கவில்லை. தென் ஆப்ரிக்க அணி சார்பில் மார்கோ ஜான்சன், ஷம்சி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ரபாடா, நோர்க்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். எக்ஸ்ட்ராவாக அந்த அணி 13 ரன்கள் கொடுத்திருந்தது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதிலுள்ள புற்கள்தான் அதற்குக் காரணம் என்று வர்ணனையாளர்கள் சொன்னார்கள். டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது குறைந்த ஸ்கோராகவும் அறியப்படுகிறது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி அடித்த குறைந்த ரன் இதுவாகும். ஐசிசியின் முழுநேர உறுப்பினராக இருக்கும் அணியால் டி20 உலகக் கோப்பை தொடரில் எடுக்கப்பட்ட இரண்டாவது மிகக் குறைந்த ரன்கள் இதுவாகும். 2021-ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இங்கிலாந்து அணி 55 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்கா 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை துரத்தியது. டி காக் மற்றும் ரெசா ஹென்ரிக்ஸ் இணைந்து ஆட்டத்தை தொடங்கினர். ஃபரூக்கி வீசிய 2வது ஓவரில் டிகாக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு கவனமாக விளையாடிய கேப்டன் மார்க்ரம் மற்றும் ஹென்ரிக்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
தென் ஆப்பிரிக்கா 8.5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது. மார்க்ரம் 23 ரன்களும், ஹென்ரிக்ஸ் 29 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு பொன்னான நாள். நடப்பு தொடரில் இதுவரை ஆடிய 8 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.