கரூர்: கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று துவங்கியது.
திமுக மாவட்ட செயலாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து, மாணவிகளுடன் சேர்ந்து வாலிபால் விளையாடினார். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அனைவருக்கும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
கரூர் மாவட்ட திமுக சார்பாக விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இன்று மாணவிகளுக்கான குழு போட்டிகளும், நாளை மாணவர்களுக்கான குழுப் போட்டிகளும் நடைபெறுகிறது. வருகின்ற 11ம் தேதி சனிக்கிழமை மாணவிகளுக்கான தடகள போட்டிகளும் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாணவர்களுக்கான தடகள போட்டிகளும் நடைபெறுகின்றது.
கபாடி, கோகோ, வாலிபால், எறிபந்து, கூடைப்பந்து, போட்டிகள் ஒவ்வொரு பிரிவுக்கும் நடைபெற்று தனித்தனியாக முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் என வழங்கப்படுகின்றன. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் மட்டும் கலந்து கொள்ள வேண்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.