ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணி, பெங்களூரு அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நடப்பு சாம்பியன் என்ற அந்த அணி, இந்த தொடரை தோல்வியுடன் தொடங்கியுள்ளது.

முதலில் விளையாடிய கொல்கத்தா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. பின்னர் 175 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி, 16.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணியின் தோல்விக்கு, மிடில் ஆடர் பேட்ஸ்மேன்கள் சரியாக செயல்படாததே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. போட்டியின் முதல் 10 ஓவர்களில் 107 ரன்கள் குவித்த அந்த அணி, அடுத்த 10 ஓவர்களில் வெறும் 67 ரன்கள் மட்டுமே சேர்த்தது. மிடில் ஆடர் சரிவே கே.கே.ஆர் தோல்விக்கு வழிவகுத்தது.
ஆனால், முன்னாள் சி.எஸ்.கே வீரரான சுரேஷ் ரெய்னா, கேப்டன் ரஹானே செய்த தவறுகளே தோல்விக்கு காரணம் என கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ரஹானே நேற்று கேப்டனாக சில ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, பந்துவீச்சின் போது ஹர்ஷித் ராணா மற்றும் சுனில் நரேனை முன்கூட்டியே கொண்டு வந்திருக்கலாம். சுனில் நரேன் ஐபிஎலில் விராட் கோலியை நான்கு முறை வீழ்த்தியுள்ளார். அவர் இருந்தால் கோலியின் விக்கெட்டை எடுக்க வாய்ப்பு அதிகம் இருந்திருக்கும்,” என அவர் கூறினார்.
மேலும், ரெய்னா, “ஹர்ஷித் ராணா பவுன்சிற்கு ஏற்ற பந்து வீச்சாளர். கொல்கத்தா மைதானம் பவுன்சிற்கு சாதகமானது என்பதால், அவரை முன்கூட்டியே கொண்டு வந்திருக்க வேண்டும். அதேபோல், பவர்பிளேவில் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக, சுனில் நரேனை பயன்படுத்தியிருந்தால், இன்னும் சிறப்பான விளைவு கிடைத்திருக்கும்,” என தெரிவித்துள்ளார்.
ரெய்னாவின் இந்த கருத்து, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கொல்கத்தா அணியின் தோல்விக்கு கேப்டன் ரஹானே எடுத்த தவறான முடிவுகள் முக்கிய காரணம் என்பதையும், அவர் இன்னும் கேப்டன்சி பற்றி அதிகம் கற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது என்பதையும் ரெய்னா முன்வைத்துள்ளார்.
இந்த தோல்விக்கு பிறகு, கே.கே.ஆர் அணியின் அடுத்த போட்டியில், ரஹானே தனது கேப்டன்சி பாணியில் மாற்றம் கொண்டு வருவாரா என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பாக உள்ளது.