பல்லேகலே: இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 3 டி.20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கிறது. இதில் முதல் டி20 போட்டி பல்லேகலே மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.
ரோகித்சர்மா, கோஹ்லி, ஜடேஜா உலக கோப்பையுடன் ஓய்வு பெற்று விட்ட நிலையில் புதிய கேப்டன் சூர்யகுமார் பொறுப்பேற்கிறார். மேலும் புதிய பயிற்சியாளர் கம்பீருக்கும் இது முதல் போட்டியாகும். கில், ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்குவர். 3வது இடத்தில் சூர்யகுமார், அதன்பின்னர் ரிஷப் பன்ட், ஷிவம் துபே அல்லது ரிங்குசிங், ஹர்திக் பாண்டியா என பேட்டிங் வரிசை இருக்கும். ஆல்ரவுண்டர்கள் அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் இடம் பிடிக்கலாம்.
பவுலிங்கில் வேகத்தில் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், சுழலில் ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு கிடைக்கும். பன்ட் இருப்பதால் சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு இருக்காது என தெரிகிறது. மறுபுறம் இலங்கை அணி புதிய கேப்டன் சரித் அசலங்கா தலைமையில் களம் இறங்குகிறது. பேட்டிங்கில் குசால் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, பதும் நிசங்கா, ஆல்ரவுண்டர்கள் ஷனகா, வனிந்து ஹசரங்கா ஆகியோர் வலு சேர்ப்பர். பவுலிங்கில் தீக்ஷனா, மதீஷா பத்திரனா, தில்ஷான் மதுஷங்கா என சிறந்த வீரர்கள் உள்ளனர். சொந்த மண்ணில் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இலங்கை உள்ளது. இந்த போட்டியை சோனி டென் 5 சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதுவரை நேருக்கு நேர்…
டி.20 போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 29 போட்டிகளில் நேருக்குநேர் மோதி உள்ளன. இதில் 19ல் இந்தியாவும், 9ல் இலங்கையும் வென்றுள்ளன. ஒரு போட்டி ரத்தாகி உள்ளது. கடைசியாக மோதிய5 போட்டியில் இந்தியா 3-1 என முன்னிலை வகிக்கிறது.