அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு நடக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், நாக்பூரில் நடைபெற்ற முதல் ஆட்டத்திலும், கட்டாக்கில் நடைபெற்ற 2-வது ஆட்டத்திலும் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்நிலையில் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு நடக்கிறது.
இதே மைதானத்தில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் இந்திய அணி பங்கேற்கும் கடைசி போட்டி இது என்பதால் இன்றைய போட்டியை வெற்றியுடன் முடிப்பதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கவனம் செலுத்த வாய்ப்புள்ளது. கட்டாக் ஆட்டத்தில் ரோகித் சர்மா 90 பந்துகளில் 119 ரன்கள் குவித்து அணியின் பேட்டிங்கை பலப்படுத்தியுள்ளார்.
மற்றொரு மூத்த பேட்ஸ்மேனான விராட் கோலியும் பார்முக்கு திரும்ப ஆர்வமாக இருக்கலாம். தொடரை வென்றுள்ள இந்திய அணி இன்றைய போட்டியில் அழுத்தம் இல்லாமல் செயல்படலாம். விராட் கோலி இதைப் பயன்படுத்திக் கொண்டு தனது உயர்மட்ட ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கலாம். கடந்த காலங்களில் ரன் மெஷினாக இருந்த விராட் கோலி 89 ரன்கள் எடுத்தால், சர்வதேச ஒரு நாள் போட்டியில் 14,000 ரன்கள் மைல்கல்லை கடப்பார். இன்றைய போட்டியில் கே.எல்.ராகுலுக்குப் பதிலாக ரிஷப் பந்த் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக களமிறங்கலாம்.
மற்றபடி அணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். அவர்களிடமிருந்து மீண்டும் ஒரு நல்ல இன்னிங்ஸ் உருவாகலாம். அதேசமயம், பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜாவும் பின்வரிசை பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கிறார். இந்திய அணி ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டு தொடரை 3-0 என கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி டி20 தொடரை இழந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது. இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றியை பெற அந்த அணி போராடலாம். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த பென் டக்கெட், ஜோ ரூட் இருவரும் ஒரு நல்ல இன்னிங்ஸை உருவாக்கலாம். பில் சால்ட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து பேட்டிங்கில் இணைந்தால் இந்திய அணிக்கு சவால் விடலாம்.