சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மார்ச் 22ம் தேதி தொடங்கும் இந்த தொடரில் முதல் போட்டியில் கொல்கத்தா, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அதே நாளில் ஹைதராபாத், ராஜஸ்தானை எதிர்கொள்கிறது. மார்ச் 23ம் தேதி நடைபெற உள்ள சென்னை-மும்பை அணிகள் மோதும் போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 19ம் தேதி காலை 10.15 மணியளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக www.chennaisuperkings.com இணையதளத்தில் விற்கப்படும். டிக்கெட் விலை 1,700 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரசிகர்கள் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் அதிகபட்சம் இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே வாங்க முடியும். போட்டி காண வரும் ரசிகர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், புகையிலை பொருட்கள், குட்கா, பீடி போன்றவற்றை கொண்டு வரக்கூடாது. மேலும், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவோர் போட்டி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே வர வேண்டும்.
ரசிகர்களுக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அனைத்து கேலரிகளிலும் விலையில்லா குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன நிறுத்தத்திற்காக கலைவாணர் அரங்கம், சென்னை பல்கலைக்கழக வளாகம், ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி, விக்டோரியா விடுதி, ரயில்வே கார் பார்க்கிங், வாலாஜா சாலை, வி. பட்டாபிராமன் கேட் போன்ற இடங்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் நடைபெறும் இந்த மாபெரும் போட்டிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.