மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. நேற்று மூன்றாவது போட்டி பெர்த்தில் நடந்தது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், ஆஸ்திரேலிய அணியில் பல முன்னணி வீரர்கள் ‘ஓய்வு’ பெற்றுள்ளனர். இதில் பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், லாபுசான் மற்றும் ஹேசல்வுட் ஆகியோர் அடங்குவர். ஜோஷ் இங்கிலிஸ் கேப்டனாக பொறுப்பேற்றார். பாகிஸ்தான் தரப்பில், ‘டாஸ்’ வென்ற கேப்டன் ரிஸ்வான், பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சால் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. ஃப்ரேசர் மெக்குர்க் (7) நசீம் ஷாவால் ஆட்டமிழந்தார். அதன்பின், ஷாஹீன் ஷா அப்ரிடி வேகத்தில் ஹார்டி (12) பந்தில் ஆட்டமிழந்தார். ஜோஷ் இங்கிலிஸ் (7), ஷார்ட் (22) விரைவில் ஆட்டமிழந்தனர்.
முகமது ஹஸ்னைன் வீசிய பந்தை இழுக்க முயன்ற போது கூப்பர் கோனோலியின் இடது கையில் காயம் ஏற்பட்டது. ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ ஸ்டைலில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் ‘டக்’ அவுட்டானார். ஸ்டோனிஸ் (8) ஏமாற்றம் அளித்தார். இறுதியில், போராடிய ஷான் அபோட் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா 26.5 ஓவரில் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பாகிஸ்தான் எளிதான இலக்கை துரத்தியது. அப்துல்லா ஷபிக் (42), சைம் அயூப் (37) சிறப்பான தொடக்கம் தந்தனர். பின்னர் கேப்டன் ரிஸ்வானும், பாபர் ஆசாமும் அதிரடியாக விளையாடினர். பாபர் ஜம்பா பந்தை எல்லைக்கு அனுப்பி வெற்றியை வசப்படுத்தினார்.
பாகிஸ்தான் அணி 26.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிஸ்வான் (30), பாபர் (28) அவுட்டாகாமல் இருந்தனர்.
22 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது. முன்னதாக 2002ல் வக்கார் யூனிஸ் தலைமையில் தொடரை 2-1 என கைப்பற்றியது.