2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவை தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. துபாயில் நேற்று நடைபெற்ற அந்தப் போட்டியில், ஆஸ்திரேலியா நிர்ணயித்த 265 ரன்களை 48.1 ஓவரில் எடுத்து இந்தியா வெற்றியை கைப்பற்றியது. இதில் விராட் கோலி 84, ஸ்ரேயாஸ் ஐயர் 45 மற்றும் ராகுல் 42* ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். இதன் மூலம் இந்தியா 2023 உலகக் கோப்பை ஃபைனலில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். இது, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அவரது 3 ஆட்டநாயகன் விருதாக மாறியது. இதன் மூலம், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரராக விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன், சௌரவ் கங்குலி, ரவீந்திர ஜடேஜா, வீரேந்திர சேவாக், மற்றும் யுவராஜ் சிங் தலா 2 ஆட்டநாயகன் விருதுகள் வென்றிருந்தனர்.
இந்த சாதனையுடன், ஐசிசி நாக் அவுட் (செமி ஃபைனல் மற்றும் ஃபைனல்) போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரராகவும் விராட் கோலி விளங்குகிறார். இவர், யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்துள்ளார், இருவரும் 3 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளனர்.
விராட் கோலி தற்போது, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராகவும் நிலைத்துள்ளார். இதுவரை 746 ரன்கள் அடித்துள்ள கோலி, முன்னதாக ஷிகர் தவான் 701 ரன்கள் அடித்திருந்த சாதனையை முறியடித்துள்ளார். மேலும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக (7) முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த வீரராகவும் கோலி சாதனை படைத்துள்ளார்.
இவை மட்டுமல்ல, விராட் கோலி ஐசிசி ஒருநாள் தொடரில் அதிக (24) முறை 50+ ரன்கள் அடித்த வீரராகவும் உலக சாதனையை உருவாக்கியுள்ளார். இதற்கு முன், சச்சின் டெண்டுல்கர் 23 முறை 50+ ரன்கள் அடித்திருந்தார். மேலும், ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் 1000 ரன்கள் அடித்த முதல் வீரராகவும் விராட் கோலி புதிதாக சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனைகள் மூலம் விராட் கோலி, கிரிக்கெட்டின் உலக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.