இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சர்வதேச போட்டிகளில் 27,000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ள அனுபவமிக்க வீரர். ஆனால் சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் அவர் சுமாராக விளையாடியது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தொடர்ந்து விக்கெட்டை இழந்தது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. இதனால், சிலர் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறலாம் என விமர்சித்தனர்.
இந்த சூழ்நிலையில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். 242 ரன்களை துரத்திய இந்திய அணிக்காக, துபாயில் நங்கூரமாக விளையாடிய அவர் தனது 82வது சர்வதேச சதத்தை பதிவு செய்தார்.
இந்த சாதனைக்கு பின்னர், ஆஸ்திரேலியாவில் விராட் கோலியை விமர்சித்தவர்கள் கிரிக்கெட்டை பற்றிய அடிப்படை புரியாதவர்கள் என ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். மேலும், விராட் கோலி இன்னும் சில ஆண்டுகள் சிறப்பாக விளையாடக்கூடும் எனவும் அவர் கணித்துள்ளார்.
அஸ்வின் இதுகுறித்து பேசியதாவது: “விராட் கோலியின் தரம் பற்றி நான் எப்போது சந்தேகப்பட்டதில்லை. ஆஸ்திரேலியாவில் அவர் ஸ்லிப் பகுதியில் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார். ஆனால் சிவப்பு பந்து மற்றும் புற்கள் நிறைந்த பிச்சில் விளையாடும் போது அவ்வாறு நடப்பது இயல்பானதே. ஆனால், மக்கள் அதிகமாக விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள்.”
அதன்மீது, “ஒருவர் ஸ்லிப் பகுதியில் அவுட்டாகலாம், கிளீன் போல்டாகலாம், எல்பிடபுள்யூ முறையில் அவுட்டாகலாம். விராட் கோலி ஸ்லிப்பில் அவுட்டானது எந்த பெரிய விஷயமும் இல்லை. அவரின் திறமை எங்கேயும் குறையவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில்தான் விராட் கோலியின் என்ஜின் உறுதியாக செயல்படுகிறது” என்றார்.
விராட் கோலி மீண்டும் தனது முழு திறமையுடன் விளையாடி வருவதைக் கண்டு அவர், “ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் விளையாடுவதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது அவரது தன்னம்பிக்கை அதிகரித்திருப்பதால், இது அவருடைய இரண்டாவது இன்னிங்ஸ் ஆக இருக்கலாம். அவர் ஒரு அற்புதமான பேட்ஸ்மேன். ஒருநாள் கிரிக்கெட்டில் 51வது சதத்தை அடித்துள்ள அவர், 14,000 ரன்களை மற்ற வீரர்களை விட குறைவான போட்டிகளில் அடைந்துள்ளார். அவரின் மேன்மையை அதைவிட எதுவும் நிரூபிக்க முடியாது” என்று கூறினார்.