அகமதாபாத்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெறவுள்ளது. மினி உலகக் கோப்பை கிரிக்கெட் எனப்படும் இந்தத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி ஜனவரி 18-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது கடைசி டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்தார்.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் பும்ரா பந்து வீசவில்லை. அதன்பிறகு அவர் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. காயம் முழுமையாக குணமடைய 5 வார ஓய்வு தேவை என இந்திய அணியின் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பும்ரா சேர்க்கப்படவில்லை. இருப்பினும் ஒருநாள் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், பும்ரா தனது ஓய்வு மற்றும் உடற்தகுதியைக் கருத்தில் கொண்டு பிப்ரவரி 12-ம் தேதி கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், சமீபத்தில் பெங்களூரில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் பும்ரா ஸ்கேன் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
ஸ்கேன் முடிவுகள் குறித்து பிசிசிஐயின் மருத்துவக் குழுவினர் தேர்வாளர்கள் மற்றும் இந்திய அணி நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. ஆனால் இது தொடர்பாக இதுவரை முறைப்படி எதுவும் அறிவிக்கப்படவில்லை. மேலும், நாளை அகமதாபாத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பும்ரா பங்கேற்கலாம் என நம்பப்பட்ட நிலையில், அவர் அவசரமாக பெங்களூருவில் உள்ள சிறப்பு மையத்துக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இறுதி வீரர் பட்டியலை அறிவிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.
இதன் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா தொடரில் பங்கேற்பது குறித்த முடிவை இந்திய தேர்வாளர்கள் இன்று அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாட முடியாமல் போனால், அவருக்கு பதிலாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஹர்ஷித் ராணா சேர்க்கப்படலாம். இருப்பினும், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பாதியிலேயே பும்ரா விளையாடினால், அவர் 15 பேர் கொண்ட இந்திய அணியில் தொடரலாம்.
அதன் பிறகும் பும்ரா விளையாட முடியாமல் போனால், ஐசிசியின் தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதலுடன் மாற்று வீரரை அணியில் சேர்க்க முடியும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே குழுவில் பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை வரும் 20-ம் தேதி எதிர்கொள்கிறது. அதன்பின் 23-ம் தேதி பாகிஸ்தானுக்கும், மார்ச் 2-ம் தேதி நியூசிலாந்திற்கும் எதிரான தொடரில் விளையாடுகிறது.