தென்கொரியாவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர்கள் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தினர். 74 நாடுகளைச் சேர்ந்த 501 வீரர்கள் பங்கேற்ற இந்த சர்வதேச தொடரில், இந்திய அணி தனது திறமையால் அனைவரையும் கவர்ந்தது.

ஆடவர் அணிப்பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியா – பிரான்ஸ் அணிகள் மோதின. கடுமையான போட்டியில் ரிஷப் யாதவ், அமன் சைனி, பிரதமேஷ் ஆகியோரைக் கொண்ட இந்திய அணி 235–233 என்ற புள்ளிகள் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
அதே நேரத்தில், கலப்பு அணிப்பிரிவில் இந்தியா – நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் 2 புள்ளி வித்தியாசத்தில் (155–157) இந்திய அணி தங்கத்தை தவறவிட்டாலும், வெள்ளிப்பதக்கத்தை வென்றது.
இதன் மூலம் ஒரு தங்கம், ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் இந்திய அணி பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து பெருமை சேர்த்துள்ளது. இந்த வெற்றி, இந்திய வில்வித்தையின் சர்வதேச முன்னேற்றத்திற்கு புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது.