ஜார்ஜியா: பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டி இன்று துவங்குகிறது. இந்திய வீராங்கனைகள் திவ்யா தேஷ்முக் மற்றும் கொனேரு ஹம்பி மோத உள்ளனர். இதன்மூலம் இந்தியா, சர்வதேச செஸ் வரலாற்றில் முக்கிய பக்கத்தை எழுத உள்ளது.
இந்த தொடரில் 46 நாடுகளிலிருந்து 107 வீராங்கனைகள் பங்கேற்றனர். ‘நாக் அவுட்’ முறையில் நடைபெற்ற போட்டியில், 19 வயது திவ்யா, உலக தரவரிசையில் முன்னிலை வகிக்கும் மூன்று வீராங்கனைகளை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். அரையிறுதியில் சீனாவின் ஜோங் இயை 1.5-0.5 என நேரடியாக தோற்கடித்தார்.

மற்றொரு அரையிறுதியில், ‘நம்பர்-5’ வீராங்கனை ஹம்பி, ‘டை பிரேக்கர்’ வரை சென்று சீனாவின் லெய் டிங்ஜீயை 5.0-3.0 என வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். இரண்டு இந்திய வீராங்கனைகளும் பைனலுக்கு வந்துள்ளதை இங்கிலாந்து, ரஷ்யா, சீனா போன்ற செஸ் வல்லரசுகளும் கவனிக்கத் தொடங்கியுள்ளன.
பைனல் போட்டி இன்று மற்றும் நாளை நடக்கிறது. இதில் 1.5 புள்ளி பெறுபவர் உலக கோப்பையை கைப்பற்றுவார். இரண்டும் டிரா ஆனால், ஜூலை 28 அன்று ‘டை பிரேக்கர்’ நடத்தப்படும். திவ்யா (19) மற்றும் ஹம்பி (38) ஆகியோரின் இந்த மோதல், புதிய தலைமுறை மற்றும் அனுபவத்தின் மோதலாகவும் பார்க்கப்படுகிறது.