புதுடெல்லி: மத்திய வரிகளிலிருந்து மாநிலங்கள் பகிர்ந்து கொள்ளும் வருவாயின் அளவை 1 சதவீதம் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, மத்திய அரசு வருவாயில் 41 சதவீதத்தை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்கிறது. இது 40 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. மார்ச் மாத இறுதிக்குள் அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு, பரிந்துரை 16வது நிதி ஆணையத்திற்கு அனுப்பப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய வரிப் பகிர்வின் அடிப்படையில், 1 சதவீதக் குறைப்பு மத்திய அரசுக்கு ஒரு நிதியாண்டில் ரூ.3,500 கோடியை வழங்கும். 1980ல் 20 சதவீதமாக இருந்த மாநிலங்களின் பங்கு தற்போது 41 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் செலவு அதிகரித்து வருவதால், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக நிதி செலவிடப்படுகிறது. இதன் விளைவாக, மாநிலங்களின் வரிப் பங்கைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மாநிலங்களுக்கு நிதி பகிர்வு குறித்து நிதி ஆணையம் ஆலோசனை வழங்கும். அதன் அடிப்படையில், மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை 16வது நிதி ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது.
அரவிந்த் பனகாரியா தலைமையிலான நிதி ஆணையம், அக்டோபரில் தனது பரிந்துரைகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிந்துரைகள் 2026-27 நிதியாண்டிலிருந்து நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது.