பெங்களூரு: பெங்களூருவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 10 வெளிநாட்டினரை நகர காவல்துறை நாடு கடத்தியுள்ளதாக நகர காவல்துறை ஆணையர் தயானந்தா தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க சி.சி.பி. போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர்களின் முயற்சியின் காரணமாக, ஹென்னூர், சிக்கஜாலா, அம்ருதஹள்ளி, வித்யாரண்யபுரா, கோவிந்தபுரா, புட்டனஹள்ளி ஆகிய இடங்களில் தங்கியிருந்த சில வெளிநாட்டினர் போதைப்பொருள் கடத்தலுக்காக கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில், சுதாகுண்டேபாளையா, கலசிபாளையா மற்றும் காமாட்சிபாளையா காவல்துறையினரும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி 32 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 17.50 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருட்களுக்கு எதிரான போரில் நாங்கள் தொடர்ந்து முன்னேறுவோம். பெங்களூரை போதைப்பொருள் இல்லாத நகரமாக மாற்றுவதே எங்கள் முக்கிய குறிக்கோள் என்று அவர் மேலும் கூறினார்.
பின்னர் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அவர் ஆய்வு செய்தார்.