பீகார்: பீகார் மாநிலத்தின் வக்சர், போச்போர், பாட்னா, சமஸ்திபூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கடந்த 26-ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, கிராமங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் சுமார் 13 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியதால், பல இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
நேபாளத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையே பீகாரில் வெள்ளப்பெருக்கிற்கு காரணம் என கூறப்படுகிறது. பீகாரில் சில ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அணைகள் உடையாமல் இருக்க வாலமீகி நகரில் கண்டக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 6 லட்சத்து 87 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கொசிப்பிற்கூர் அணையில் இருந்து 7.54 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அடுத்த ஓரிரு நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது, இதனால் மக்கள் எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.