பாலக்காடு கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஆதிகேசவபுரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மகாநவமி நவராத்திரி உற்சவம் இந்தாண்டு மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்பட்டது. அதிகாலை நிர்மால்ய தரிசனத்துடன் துவங்கிய இந்த விழா, பக்தர்களின் ஆன்மீக உந்துதலை அதிகரிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நிரம்பி வழிந்தன.

காலை 7 மணிக்கு நடைபெற்ற யானையூட்டு நிகழ்வின் பின்னர், பஞ்சவாத்திய இசையுடன் அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது. அனந்தநாராயணன் மாராரின் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். முத்துமணி குடை சூடிய யானைகள் அணிவகுப்பில் காழ்ச்ச சீவேலி நிகழ்வு பக்தர்களின் கண்களுக்கு விருந்தாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து காலை 10:30 மணிக்கு சதீசன் மாரார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் பஞ்சாரிமேளம் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு, அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
மாலை 4:30 மணிக்கு 15 யானைகள் பங்கேற்ற குடைமாற்று விழா மிகுந்த கோலாகலமாக நடைபெற்றது. பஞ்சவாத்தியம், சிங்காரி மேளம், பூக்காவடி, நாதஸ்வரம் முழங்க பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடி விழாவை கண்டு ஆனந்தமடைந்தனர். அதன்பின் நாதஸ்வர கச்சேரி மற்றும் பாண்டிமேளம் இசை நிகழ்ச்சிகளும் நடந்தன.