கவுகாத்தி: அஸ்ஸாம் சட்டசபையில் வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் தொழுகை நடத்த 2 மணி நேரம் இடைவெளி விடப்பட்டது. இந்த நடைமுறை 1937-ம் ஆண்டு சையது சாதுல்லா முதல்வர் ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. சுமார் 90 ஆண்டுகளாக இருந்து வரும் இந்த நடைமுறையை ரத்து செய்ய கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சபாநாயகர் தலைமையில் கூடிய சட்டசபை விதிகள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு மற்ற நாட்களைப் போலவே வெள்ளிக்கிழமையும் சட்டசபை செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் பிஸ்வஜித் டெய்மரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அசாம் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியுள்ளது. இந்த அமர்வில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேரம் ஓய்வு எடுக்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வரவேற்றுள்ளார். அதே நேரத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஏஐயுடிஎப் எம்எல்ஏ ரிபிகுல் இஸ்லாம் கூறும்போது, “சட்டசபையில் 30 முஸ்லிம் எம்எல்ஏக்கள் உள்ளனர். வெள்ளிக்கிழமை விடுமுறையை ரத்து செய்யும் நடைமுறையை நாங்கள் எதிர்த்தோம். ஆனால் அவர்கள் (பாஜக) ஒருதலைப்பட்சமாக இந்த முடிவை அமல்படுத்தியுள்ளனர்.