சென்னை: தென் இந்தியாவில் கோடை பருவம் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்து, தென் மேற்கு பருவமழை எதிர்பாராத விதமாக இன்று கேரளாவில் தொடங்கியுள்ளது. இந்த பருவமழை நாட்டின் முதுகெலும்பான விவசாயத்துக்கே சக்கதி அளிக்கும் முக்கியமான இயற்கைச் சூழல். பருவமழை நாடு முழுவதும் பொருளாதாரத்தையும் பங்குச் சந்தையையும் நேரடியாகத் தாக்கக்கூடியது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் இந்த பருவமழை முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாயம் மட்டுமின்றி, நீர்மைன் உற்பத்தி, நுகர்வு, கிராமப்புற வருமானம், விலைவாசி போன்ற துறைகளிலும் இது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாடு முழுவதும் விவசாய நிலத்தின் 55% பருவமழை சார்ந்ததாக இருக்க, 61% விவசாயிகள் மழைநீரையே நம்பி செய்கை நடத்துகிறார்கள்.
இந்த ஆண்டில் மழை நேரத்துக்கு முன்பாக துவங்கியிருப்பது, 2025 ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல அறிகுறி. இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டு மழை 105% என்ற நீண்ட கால சராசரியை விட அதிகமாக இருக்கும் என கணித்துள்ளது. இதன் விளைவாக 2025-26 பயிர் ஆண்டுக்காக உணவுத்தானிய உற்பத்தி இலக்கு 354.64 மில்லியன் டனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2024-25 ஆண்டில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் 4.4% வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டின் 2.7% வளர்ச்சியை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றம். ஐசிஆர்ஏ நிறுவனத்தின் கணிப்பின்படி, விவசாயம், வனம் மற்றும் மீன்வளத் துறைகளின் மொத்த வளர்ச்சி 3.7% இருக்கும்.
கரீப் பயிர் உற்பத்தி 7.9% மற்றும் ராபி பயிர் உற்பத்தி 6% அதிகரித்துள்ளது. இது விவசாய வருமானத்தை உயர்த்துவதால் கிராமப்புற மக்களின் நுகர்வையும் பெருக்கும். கிராம வருமானத்தில் 37% பயிர்ச்செய்கையிலிருந்தும், 49% கூலித் தொழிலில் இருந்தும் வருகிறது. இதனால் மழை நேர்மறையாக இருந்தால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பு கூட அதிகரிக்கிறது.
2023-ல் பருவமழை குறைவாக இருந்ததால் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தது. அதே ஆண்டில் உணவு பணவீக்கம் சராசரியாக 7.9% ஆக இருந்தது. ஆனால் நல்ல பருவமழை உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது. CPI-யில் உணவுப் பொருட்களின் பங்கு 40% என்பது முக்கியமான தரவாகும்.
மழை நீர் வளங்களையும் நிரப்புவதால் நீர்மின் உற்பத்தியும் அதிகரிக்கிறது. 2024 ஜூனில் நீர்த்தேக்கங்களில் 20% மட்டுமே நீர்மட்டம் இருந்த நிலையில், பருவமழை நீர்த்தேக்கங்களை நிரப்பும் வாய்ப்பு அதிகம்.
பருவமழை தவறவந்தால் பொருளாதாரத்தின் பல பகுதிகளில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. 2023ல் மழை குறைவால் பருப்பு விதைப்பு 8.3%, எண்ணெய் விதைப்பு 0.9%, பருத்தி விதைப்பு 1.8% வீழ்ச்சி கண்டது. மு.கா.தே.வே.உ.தி. வேலை வாய்ப்பு தேவையும் 15.2% அதிகரித்தது.
இந்நிலையில், 2025ல் எதிர்பார்க்கப்படும் நல்ல பருவமழை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 6.2% ஆகவும், 2026ல் 6.3% ஆகவும் உயர்த்தும் என ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கணித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் வளர்ச்சியின் புதிய கட்டத்திற்கு செல்லும் என்று நம்பப்படுகிறது.