பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று தொடங்கியது. கேரளாவில் தேசிய ஆண்டு கூட்டம் நடைபெறுவது இதுவே முதல் முறை.
3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைந்த 32 அமைப்புகளைச் சேர்ந்த 320 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் 6 இணைப் பொதுச் செயலாளர்களும் பங்கேற்கின்றனர்.
இந்தக் கூட்டத்தின் தொடக்கத்தில், வயநாடு நிலச்சரிவு தொடர்பான விவரங்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அளித்த உதவிகள் குறித்து விவாதிக்கப்படும்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா அடுத்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற உள்ளதால், அடுத்த ஓராண்டில் சமூக சீர்திருத்தம், தேசம் கட்டுவது தொடர்பான 5 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேற்றப்பட்டதையடுத்து, அந்நாட்டில் வாழும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல், கோவில்கள் மீதான தாக்குதல் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
கடந்த 2 தேர்தல்களை விட இம்முறை பா.ஜ.க. குறைவான இடங்களை பெற்றதற்கு பா.ஜ.க. மற்றும் ஆர்எஸ்எஸ் இடையேயான மோதல்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.