மும்பை: மார்ச் 14-ம் தேதி அமீர்கானுக்கு 60 வயதாகிறது. அவர் 1986-ல் ரீனா தத்தாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஜுனைத் கான் என்ற மகனும், ஐரா என்ற மகளும் உள்ளனர். தற்போது ஜுனைத் கான் ஹிந்தியில் ‘லவ்யப்பா’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘லவ் டுடே’ படத்தின் ரீமேக் இது.
ஐரா கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக 2002-ல் ரீனா தத்தாவை விவாகரத்து செய்த அமீர் கான், பின்னர் கிரண் ராவை மணந்தார். இந்த தம்பதிக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார். 2021-ம் ஆண்டு தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்த அமீர்கான், தற்போது 2-வது விவாகரத்து காரணமாக தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் அமீர்கானுக்கு வாழ்க்கையில் மூன்றாவது காதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் பெங்களூருவை சேர்ந்த பெண்ணை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பாலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது குறித்து அமீர்கான் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.