கர்நாடக அமைச்சரவை கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று நடந்தது. இதில், அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஒப்பந்தப் பணிகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது போல், முஸ்லிம்களுக்கு 4% வரையிலான ஒப்பந்தப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பா.ஜ.க., மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “தனி தொகுதி, தனி பல்கலை., நாடு பிரிவினைக்கு வழி வகுத்துள்ளது. அதேபோல், மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கினால், பிரிவினை அதிகரிக்கும். ஓட்டு வங்கியை மனதில் வைத்து, காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. ராகுல் காந்தியின் விருப்பப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புக்கு எதிரானது. சட்டத்தையும், மக்களின் வரிப்பணத்தையும் காங்கிரஸ் தவறாக பயன்படுத்துகிறது. நாட்டின் பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது.

பெங்களூரு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கூறுகையில், “தேர்தல் அரசியலுக்காக காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கர்நாடக அரசின் இந்த முடிவு மத மாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது. அரசின் அதிகாரத்தையும், பொது வளத்தையும் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் தவறாக பயன்படுத்துகிறது. அரசியல் தேவைக்காக நாட்டின் பொருளாதாரத்தை விளையாட்டு மைதானமாக மாற்றியுள்ளது காங்கிரஸ்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் “கர்நாடக அரசின் முடிவை எதிர்க்கட்சிகள் மாற்றுகின்றன. இந்த இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு ஒப்பந்த வேலைகளில் இடஒதுக்கீடு வழங்குவது போல் மத சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து சிறுபான்மையினரும் பயனடைவார்கள்” என விளக்கமளித்துள்ளார்.