ஓகேனேக்கல்: கர்நாடகா, கேரளா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான மைசூர், மாண்டியா, குடகு, ஹாசன், வயநாடு உள்ளிட்ட பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று கபினி அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடியும் என மொத்தம் 85 ஆயிரம் கனஅடி உபரி நீர் இரு அணைகளில் இருந்தும் காவிரியில் திறந்து விடப்படுகிறது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று மாலை, 70 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 57 ஆயிரம் கன அடியாக குறைந்தது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பிரதான அருவி, மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பனி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் கடலோர மக்களுக்கு தர்மபுரி கலெக்டர் சாந்தி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.தொடர்ந்து ஆறாவது நாளாக காவிரி ஆற்றில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் விதித்த தடை நீடிக்கிறது.