புதுடெல்லி: ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பு உலகம் முழுவதும் உள்ள பாரம்பரிய நினைவுச்சின்னங்களை அங்கீகரிக்கிறது. அதன்படி, காடு, மலை, ஏரி, பாலைவனம், நினைவுச் சின்னம், கட்டிடம் போன்றவற்றுக்கு பாரம்பரிய அங்கீகாரம் வழங்கப்படுகிறது. தற்போது, யுனெஸ்கோ உலகெங்கிலும் உள்ள 1,223 பாரம்பரிய நினைவுச்சின்னங்களை அங்கீகரித்துள்ளது. இதில் 43 இந்தியாவில் மட்டும் உள்ளன.
1998 முதல் 2014 வரை 56 இந்திய வரலாற்றுச் சின்னங்களுக்கு அங்கீகாரம் கோரி நிலுவையில் உள்ளது. இவை யுனெஸ்கோவின் தற்காலிக பட்டியலில் உள்ளன. இந்நிலையில், 6 புதிய இந்திய வரலாற்று நினைவுச்சின்னங்களும் தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தெலுங்கானா மாநிலம் நாராயண்பேட்டை மாவட்டத்தில் உள்ள முதுமால் பகுதியில் 1,200-க்கும் மேற்பட்ட யுனெஸ்கோ நினைவுச்சின்னங்கள் உள்ளன. இது யுனெஸ்கோ பாரம்பரிய அங்கீகாரத்திற்கான தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதேபோல், சத்தீஸ்கரில் உள்ள கங்கேர் தேசிய பூங்கா, பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள அசோகர் கால கல்வெட்டுகள், மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் அமைந்துள்ள சவுசத் யோகினி கோவில்கள், வடமாநிலங்களில் அமைந்துள்ள குப்தர் கால கோவில்கள், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள பண்டேலா கோட்டைகள் ஆகியவை யுனெஸ்கோவின் தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: யுனெஸ்கோ பாரம்பரிய அங்கீகாரத்திற்கு, ஒரு பெயரை முதலில் தற்காலிக பட்டியலில் சேர்க்க வேண்டும். அதன் பிறகு, பரிந்துரைக் குழு, ஆலோசனைக் குழு, உலகப் பாரம்பரியக் குழு எனப் பல்வேறு நிலைகளைக் கடந்து செல்ல வேண்டும். இதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். யுனெஸ்கோ தற்காலிக பட்டியலில் 6 புதிய வரலாற்று நினைவுச்சின்னங்களை சேர்த்துள்ளோம். இவை உட்பட 62 இந்திய பாரம்பரிய சின்னங்கள் நிலுவையில் உள்ளன.
உலகெங்கிலும் உள்ள 181 நாடுகளில் இருந்து சுமார் 1,756 வரலாற்று நினைவுச்சின்னங்கள் பரிசீலனையில் உள்ளன. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.