ஐதராபாத்: தெலுங்கானாவில் மாவோயிஸ்ட்கள் 6 பேர் போலீசாரிடம் சரணடைந்தனர். மத்திய அரசு, அடுத்தாண்டுக்குள் நாட்டிலிருந்து மாவோயிஸ்ட் அமைப்புகளை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக, பல முக்கிய தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு, சிலர் சரண் அடைந்து வருகின்றனர்.

ஒருகாலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கத்தில் இருந்த தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநில கிராமங்கள், தற்போது அந்த ஆட்சியிலிருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றன. இது அரசின் தீவிர நடவடிக்கையின் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், பத்ராத்ரி கோத்தகுடேம் மாவட்டத்தில் போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் இணைந்து நடத்திய ஆபரேஷன் செயுதா நடவடிக்கையின் போது, சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒருவர் உட்பட 6 மாவோயிஸ்ட்கள் போலீஸ் அதிகாரி பி. ரோஹித் ராஜுவிடம் சரணடைந்தனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ள மறுசீரமைப்பு திட்டங்களின் நன்மைகளைப் பெற விரும்பிய இவர்கள், தங்கள் குடும்பங்களுடன் மாவோயிஸ்ட் அமைப்பை விட்டு வெளியேறி சரணடைந்துள்ளனர். இந்தச் சரணடைப்பு, அந்தப் பகுதியில் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான நல்ல முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.