ஜார்க்கண்டின் தான்பாத் மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகளில் 800க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பராமரிப்பு குறைபாட்டை மதுபான கடை உரிமையாளர்கள் “எலிகள் குடித்துவிட்டன” என்ற அதிரடியான காரணத்தைச் சொல்லி சமாளிக்க முயன்றனர். ஆனால் அதிகாரிகள் இந்த விளக்கத்தை நிராகரித்து, இழப்பிற்கான தொகையை திருப்பிச் செலுத்த உத்தரவிட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் அரசு வரும் செப்டம்பர் 1 முதல் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, மதுபான கடைகள் ஆன்லைன் குலுக்கல் முறையில் ஒதுக்கப்பட உள்ளது. இந்த புதிய முறைக்கு முந்தைய நிலையில் கையிருப்பு ஆய்வு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தான்பாத் மாவட்டத்தில் நடந்த சோதனையில், 802 மதுபான பாட்டில்கள் கணக்கில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், பாட்டில்களின் மூடியை எலிகள் கிழித்துவிட்டு அதிலிருந்த மதுபானத்தை குடித்துவிட்டன என்று உரிமையாளர்கள் விளக்கம் அளித்தனர். ஆனால், இந்த கதை அதிகாரிகளுக்கு நம்பிக்கை அளிக்காத நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் அளித்த பதிலில் ஊழல் நக்கீராக தெரிகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது முதல் முறை அல்ல. இதற்கு முன் ஜார்க்கண்ட் போலீசார் பறிமுதல் செய்த 10 கிலோ கஞ்சா மற்றும் 9 கிலோ கஞ்சா இலைகளை எலிகள் தின்றுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். நீதிமன்றம் அந்த நேரத்தில் போலீசாரின் பதிலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை மதுபானத்திற்கும் அதே நிலை ஏற்படுவதால், அதிகாரிகள் மிகவும் கடுமையாக அணுகி வருகிறார்கள். வர்த்தகர்களின் பொறுப்பற்று செயல்களால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது பொதுமக்கள் நலத்துக்கே எதிரான செயல் என்றும் கூறப்படுகிறது.