திருமலை: திருமலையில் உள்ள கோகுலம் விருந்தினர் மாளிகையில் 76-வது குடியரசு தின விழா நேற்று நடந்தது. கூடுதல் செயல் அலுவலர் வெங்கையா சவுத்ரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து தேவஸ்தான விஜிலென்ஸ் பாதுகாப்பு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
திருமலை திருப்பதி தேவஸ்தானம் அவ்வப்போது செய்து வரும் பல்வேறு ஏற்பாடுகள் குறித்து பக்தர்களிடம் கருத்து கேட்டு, அதற்கேற்ப பக்தர்களுக்கு மிகவும் வசதியான தரிசனம் மற்றும் இதர வசதிகளை வெளிப்படைத்தன்மையுடன் வழங்குவதே எங்களது நோக்கம். உலகம் முழுவதிலுமிருந்து இறைவனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பக்தர்களின் வசதிக்காக அன்னதானம் மற்றும் வரிசை நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்களுக்கு சிறந்த தரமான உணவு பிரசாதம் வழங்க அதிநவீன இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 10 முதல் 19 வரை 6.80 லட்சம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்தனர். இந்த 10 நாட்களில் பக்தர்களிடம் இருந்து வந்த கருத்துகளில், சொர்க்கவாசல் தரிசனத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாக 96 சதவீத பக்தர்கள் தெரிவித்துள்ளனர். திருமலையில் தங்கும் விடுதி அறைகள் ஒதுக்கீட்டில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படும்.
சில கழிவறைகளின் மராமத்து பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். திருமலையில் அன்னதானம், சுகாதாரம், மின்துறை, தோட்டக்கலைத்துறை போன்ற துறைகள் சிறப்பாக செயல்படுவதோடு, கூட்டு முயற்சியின் மூலம் அனைத்து துறைகளிலும் 100 சதவீதம் சிறந்த சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கோயிலின் தகவல் தொழில்நுட்பத் துறையை பலப்படுத்தவும், பக்தர்களுக்கு எளிதான முறையில் சேவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இ-உண்டியல் முறை நல்ல பலனைத் தருகிறது. திருமலையில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கியோஸ்க்களில் யுபிஐ மூலம் பக்தர்கள் எளிதாக நன்கொடை வழங்கி வருகின்றனர். திருமலைக்கு தினமும் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்படும் வசதிகளில் சில நேரங்களில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற சவால்களை சமாளித்து பக்தர்களுக்கு வசதியான சேவைகளை வழங்க அயராது உழைத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தலைமை பொறியாளர் சத்தியநாராயணன், வட்டாட்சியர்கள் ராம்குமார், சுரேந்திரா, கண்காணிப்பாளர்கள் துளசி, ராமச்சந்திரா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.