புது டெல்லி: கணவன்-மனைவி இருவரும் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பணம் பெற்றதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி, குடும்பத்தில் ஒரு உறுப்பினர் மட்டுமே இந்தப் பலனைப் பெறத் தகுதியுடையவர். இருப்பினும், மத்திய வேளாண் அமைச்சகம் நடத்திய ஆய்வில் கணவன்-மனைவி இருவரும் பயனடைந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தை நன்கு அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:-
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-Kisan) திட்டத்தின் 31.01 லட்சம் பயனாளிகள் விசாரிக்கப்பட்டனர். இவர்களில் 17.87 லட்சம் பேர் கணவன்-மனைவி என அடையாளம் காணப்பட்டனர். குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயனாளியாக இருக்க வேண்டும் என்ற விதி இந்தத் திட்டத்தில் உள்ளது. இருப்பினும், இந்தத் திட்டத்தின் மூலம் கணவன்-மனைவி இருவரும் ஒரே நேரத்தில் பணப் பலன்களைப் பெற்றனர்.

இது விதிகளை மீறுவதாகும். இதைத் தொடர்ந்து, மத்திய வேளாண் அமைச்சகம் இப்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி, அக்டோபர் 15-ம் தேதிக்குள் பயனாளிகளின் சரிபார்ப்பை முடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மாநிலங்கள் இதைத் தெரிவித்துள்ளன.
விவசாயிகளின் குடும்பங்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் மத்திய அரசால் பிரதம மந்திரி கிசான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ. 6,000 மூன்று தவணைகளாக ரூ. 2,000 வழங்கப்படுகிறது. இது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.