மும்பை: யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 821வது ரேங்க் பெற்ற பூஜா கேத்கர், மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்ட உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை அவர் பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்தது.
பூஜா தனது சொந்த காரில் மகாராஷ்டிரா அரசு தகடு மற்றும் சிவப்பு-நீல சைரன் ஒளியைப் பயன்படுத்தியுள்ளார். கூடுதல் கலெக்டர் அஜய் மோர் இல்லாத நேரத்தில் அவரது முன் அறையை பூஜா ஆக்கிரமித்து, அங்கிருந்த பொருட்களை அவரது அனுமதியின்றி அகற்றினார். வருவாய் உதவியாளரிடம் தன் பெயரில் லெட்டர் ஹெட், பெயர் பலகை உள்ளிட்ட வசதிகளை செய்து தரும்படி கூறியுள்ளார். பூஜாவின் தந்தை ஓய்வு பெற்ற அதிகாரி என்பதால், மகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக புனே மாவட்ட ஆட்சியர் சுகாஸ் திவேசா மாநில தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து பூஜா புனேவில் இருந்து வாஷிமுக்கு மாற்றப்பட்டார். ஆனால், வேலையில் சேரும் முன் பூஜா பல வசதிகளைக் கேட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பான வாட்ஸ்அப் உரையாடல்களின் 3 ஸ்கிரீன் ஷாட்கள் வெளியாகியுள்ளன.
ஓபிசி இட ஒதுக்கீட்டில் பூஜா கேத்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருந்தால் (கிரீமி லேயர்) இந்த பலனைப் பெறலாம். ஆனால், பூஜாவின் தந்தை தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ.40 கோடி என்றும், ஆண்டு வருமானம் ரூ.43 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக ஓபிசி பிரிவில் அவர் தேர்வு செய்தது செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தவிர யுபிஎஸ்சி தேர்வின் போது கற்றல் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக கூறி சிறப்பு சலுகைகளை பெற்றார். ஆனால், அவர் மருத்துவ பரிசோதனைக்கு செல்லவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்த ஒரு நபர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இக்குழு விசாரணை நடத்தி 2 வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்.